வேங்கைவாசல் பகுதியை சேர்ந்த அப்துல் ரகுமான் 82 வயதாகும் இவர் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் விஞ்ஞானியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவர் தற்போது கடற்பாசிகள் மற்றும் தாவரத்தை வைத்து, ‘பயோ -உப்பு’ தயாரித்துள்ளார் . இந்த உப்பின் பயன் குறித்து அவர் கூறியதாவது, உப்பு, மனித உடலின் வளர்ச்சி மற்றும் வளர்ச்சிதை மாற்றம் தொடர்புடைய நிகழ்வுகளில், சமபங்கு வகிக்கிறது.கடல்நீரில் சோடியம், மெக்னீஷியம், கால்சியம், பொட்டாசியம் என, 72 வகை உப்புகள் உள்ளன. மனித உடலில், இவற்றில் 22 வகையான உப்புச் சத்துக்கள் உள்ளன.இவ்வளவு சத்துக்கள் இருந்தாலும், அவை, நம் முறையற்ற உணவு பழக்கவழக்கத்தால், சரியான விகிதத்தில் இல்லை.
உதாரணமாக, அயோடின் குறைபாடு ஏற்பட்டால், அதை அதிகப்படுத்த அயோடின் சத்து நிறைந்த உப்பை மட்டுமே, நாம் பயன்படுத்துவோம். இதனால், மற்ற சத்துக்கள் குறைந்து, தைராய்டு உட்பட பல நோய்களால் பாதிக்கப்படுகிறோம். இதை தடுக்க, ‘ஆர்கானிக்’ உப்பும் நடைமுறை பயன்பாட்டில் உள்ளது. நான் கண்டுபிடித்துள்ள உப்பு, ஆர்கானிக் உப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. தமிழக கடலோர பகுதிகளில் எண்ணற்ற, மருத்துவ குணம் கொண்ட, அரிய வகை கடற்பாசிகளும், உப்பளங்களில் தாவரங்களும் உள்ளன.இதில், கிரேசிலேரியா, கபாபைகஸ் எனும் கடற்பாசிகளையும், உப்பளங்களோரம் வளரும், சாலிகார்னியா எனும் தாவரத்தையும் வைத்து ‘பயோ- உப்பை’ கண்டுபிடித்துள்ளேன்.
இந்த உப்பு, முழுதும் சைவ முறையில் தயாரிக்கப்படுவதால், பயன்பாட்டில் உள்ள சோடியம் சத்து நிறைந்த, உப்பில் இருந்து மாறுபட்டுள்ளது. பயோ உப்பில் தீங்கு விளைவிக்கக்கூடிய சோடியம் சத்து குறைவாகவும், கால்சியம், ஜிங்க், சிலினியம், இரும்பு, வைட்டமின் பி12 போன்ற நன்மை தரக் கூடிய உப்புகள் அதிகமாகவும் உள்ளன. எனவே, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைத்து வயதினரும், இதை உணவில் பயன்படுத்தலாம். குறிப்பாக, நீரிழிவு நோய், இதய நோய், உடல் பருமன் உட்பட பல நோய்களால் பாதிக்கப்படுவோர், இந்த உப்பை பயன்படுத்துவதால், அந்நோய்களில் இருந்து விரைவில் குணமாகும் வாய்ப்புள்ளது, ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது”.என அவர் கூறினார்.