உலகில் உள்ள பல்வேறு துறைகளிலும் பெண்கள் சாதித்து வருகின்றனர். அந்த வகையில் அறிவியலிலும், ஆராய்ச்சி துறையிலும் பல்வேறு விதமான சாதனைகளை பெண்கள் படைத்து வருகின்றனர். இஸ்ரோ, INSA போன்ற நிறுவனங்களிலும் பெண்கள் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இந்நிலையில் அறிவியலில் சாதனை படைத்த சில பெண்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தியாவின் ஏவுகணை பெண் என்று அழைக்கப்படும் டெசி தாமஸ் நாட்டின் ஏவுகணை திட்டத்திற்கு தலைமை வகித்த முதல் பெண் என்ற பெருமையை பெற்றவர் ஆவார். இவர் DRDO அமைப்பின் இயக்குனர் ஜெனரல் ஆவார். இதனையடுத்து டிஆர்டிஓ-வின் அக்னி 4 ஏவுகணை திட்டத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றியுள்ளார். கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஏவுகணை துறையில் பணியாற்றி வரும் டெசி தாமஸ் ஏவுகணை வழிகாட்டுதல் பிரிவில் முனைவர் பட்டமும், பல்வேறு கௌரவ டாக்டர் பட்டங்களும் பெற்றுள்ளார்.
மங்களா மணி என்பவர் அண்டார்டிகாவில் 403 நாட்கள் தங்கி ஆராய்ச்சி பணியில் ஈடுபட்டுள்ளார். இவர் உறை பணி சூழலில் அதிக நாட்கள் தங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையை பெற்றுள்ளார். கடந்த 2016-ஆம் ஆண்டு அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு செல்வதற்கு தேர்வு செய்யப்பட்டார்.
முத்தையா வனிதா என்பவர் முதல் பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் சந்திராயன் 2 விண்கலத்தின் திட்ட இயக்குனர் ஆவார். அதோடு ஓசன்சாட்-2, கார்டோசாட்-2 போன்ற விண்கலன்களில் துணை திட்ட இயக்குனராக இருந்துள்ளார். இவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் மின்னணு அமைப்பு பொறியியல் பட்டம் பெற்றுள்ளார். கடந்த 2006-ஆம் ஆண்டு முத்தையா வனிதாவுக்கு சிறந்த பெண் விஞ்ஞானி என்ற விருது வழங்கப்பட்டது.
சுகன்தீப் காங் என்பவர் குழந்தைகளுக்கு ஏற்படும் வைரஸ் தொற்று குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு பிரபலமானார். இவர் ஒரு வைரலாஜிஸ்ட் மற்றும் அறிவியலாளர் ஆவார். இவர் ஃபெலோவாக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண் விஞ்ஞானி என்ற பெருமையை பெற்றுள்ளார். இவர் THSTI அமைப்பின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருகிறார். மேலும் உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவின் நோய் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனை குழுவின் தலைவராக இருக்கும் சுகன்தீப் காங், ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் பதவி வகிக்கிறார்.