திண்டுக்கல் பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா மார்ச் 22-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கப்பட உள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவில் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடாகும். இந்த கோவிலில் வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் பல லட்சம் பக்தர்கள் முருகனை குளிர்விக்கும் பொருட்டு பங்குனி மாதத்தில் கொடுமுடிக்கு சென்று தீர்த்தம் எடுத்து அபிஷேகம் செய்வது சிறப்பான ஒன்றாகும். அதேபோல் இந்த வருடமும் வருகிற 22-ஆம் தேதி பழனி முருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. இந்த விழாவில் வள்ளி தெய்வானையும், முத்துக்குமாரசுமியும் தந்தப்பல்லக்கில் உலா வருவர்.
இதையடுத்து இரவு 8 மணி அளவில் ஆட்டுக்கிடா, பிடாரி மயில், வெள்ளி காமதேனு, யானை, தங்கக்குதிரை, தங்கமயில், புதுச்சேரி சப்பரம் ஆகிய வாகனங்களில் சுவாமி புறப்பாடும் நடைபெறும். இதனை தொடர்ந்து 27-ம் தேதி வெள்ளி ரதத்தில் சன்னதி வீதி, முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம், கிரிவீதிகளில் திருவிழா போன்றவை நடைபெறும். இந்த விழாவின் சிறப்பு அம்சமான தேரோட்டம் வருகிற 28-ஆம் தேதி மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. இதையடுத்து 31-ஆம் தேதி பங்குனி உத்திர விழா நிறைவுபெற உள்ளது.