அலங்கார வளைவு கட்டும் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் 7 பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி வர்ணபுரத்தில் உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் அருகே அமைந்துள்ள பகுதியில் புதிதாக வணிக வளாகம் கட்டப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு அந்தப் பகுதியில் காண்கிரெட்டால் ஆன அலங்கார வளைவு அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்காக பக்கவாட்டில் இரண்டு கான்கிரீட் தூண்கள் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் அலங்கார வளைவு அமைப்பதற்காக இரண்டு தூண்களையும் இணைக்கும் வகையில் கம்புகளால் சாரம் அமைக்கப்பட்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து கான்கிரீட் கலவை போடும் பணி நேற்று தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்த பணியில் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் தட்டாங்குட்டை பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் (42), ரஜினி (40), காளிமுத்து (40), குமாரபாளையம் இந்திரா நகர் பகுதியில் சேர்ந்த முருகேசன் மகன் கிரி (24), பவானி பழைய பஸ் நிலையம் பகுதியைச் சேர்ந்த குணசேகரன் (38), பவானி மேற்கு தெருவை சேர்ந்த ராஜி என்பவரின் மனைவி செல்லம்மாள் (40), கமலா (40) போன்றோர் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சாரம் திடீரென சரிந்து விழுந்தது. இதனால் வளைவில் போடப்பட்ட கான்கிரீட் கலவையும் அப்படியே கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக இடிபாடுகளுக்கு இடையே சிக்கி தொழிலாளர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் ஓடி சென்று காயம் அடைந்தவர்களை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் காமலா, செல்லம்மாள், குணசேகரன் போன்றோர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றார்கள். இது பற்றி பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.