அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள், கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வலியறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டது. அதன்படி அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவன விமானிகள் கடந்த 3 ஆண்டுகளாக தங்களது பணி ஒப்பந்தங்களில் மாற்றம் செய்யக் கோரி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், விமான நிறுவனம் அதனை கண்டுகொள்ளவில்லை என தெரிகிறது. இந்நிலையில் அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள், கோரிக்கைகளை உடனடியாக பரிசீலனை செய்ய வலியறுத்தி திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடி விமான நிலைய வாயில்களில் வரிசையாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விமானிகளின் அறிவிக்கப்படாத இந்த போராட்டத்தினால், அமெரிக்கா முழுவதும் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக 120க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக சியாட்டில், போர்ட்லாண்ட், ஓரிகான், லாஸ்ஏஞ்சல்ஸ், சான்பிரான்சிஸ்கோ ஆகிய இடங்களுக்கு செல்ல முன்பதிவு செய்திருந்த 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் இப்போராட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து விமானிகளின் இந்த திடீர் மறியல் போராட்டத்தை கருத்தில்கொண்டு, அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனமானது விமானிகளின் கோரிக்கைகளை குறித்து, விரைவில் பரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது . மேலும் இச்சம்பவம் குறித்து போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த விமானி ஒருவர் கூறியுள்ளதாவது, இது ஒரு அடையாள போராட்டம் மட்டுமே. எனவே இந்த போராட்டத்தின் மூலம் எங்கள் நிர்வாகத்திற்கு புதிய ஒப்பந்தத்திற்கான நேரம் இது என்ற வலுவான செய்தியை அனுப்ப நாங்கள் ஒன்று கூடியுள்ளோம். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.