திண்டுக்கல்-பழனி சாலையில் கல்லறை தோட்டம் அருகே இருக்கும் தனியார் வணிக வளாகத்தில் ராஜேஷ் குமார் என்பவர் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இங்கு ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்? வழக்கமாக ஊழியர்கள் வேலை முடிந்ததும் மின் இணைப்பை துண்டித்து விட்டு வீட்டிற்கு செல்வர். பின்னர் மறுநாள் காலை அழகு நிலையத்தை திறக்கும் போது மின் இணைப்பு பெட்டியில் இருக்கும் சுவிட்சை அழுத்தி மின்விளக்குகளை எரிய விட்டு வேலை பார்ப்பர். இந்நிலையில் நேற்று காலை ஊழியர்கள் மின் இணைப்பு பெட்டியில் இருக்கும் சுவிட்சை அழுத்தியபோது ஒரு அறையில் இருந்து திடீரென தீப்பொறி பறந்து புகை கிளம்பியது.
சிறிது நேரத்தில் அறை முழுவதும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனை பார்த்த அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அழகு நிலையத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.