ஆப்கானிஸ்தானில் வரலாறு காணாத அளவுக்கு பனிப்பொழிவு கடுமையாக இருந்து வருகிறது. இதனால் மக்கள் மோசமான உயிரிழப்புகளை சந்தித்து வருகின்றனர். அந்த வகையில் இதுவரை பனிப்பொழிவால் 76 பேர் காயமடைந்துள்ளதாகவும், 42 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆப்கானிஸ்தான் முழுவதும் கடந்த 20 நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்து நாசமானதாக வெளியுறவு அமைச்சகம் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கிடையே சுமார் நூற்றுக்கணக்கான மக்கள் நெடுஞ்சாலைகளில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக சிக்கித் தவித்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பேரிடர் மேலாண்மை துறை துணை அமைச்சர் ஷுஜா தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பல்வேறு உதவும் அமைப்புகளுடன் இணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அவசர உதவிகளை வழங்கி வருவதாக ஷுஜா கூறியுள்ளார்.