கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கெலமங்கலம் பகுதியில் கூலி தொழிலாளியான ராஜேந்திரன்(27) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது சித்தி பாப்பம்மா வீட்டில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் கிணற்றில் அழுகிய நிலையில் ராஜேந்திரன் சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடல் தார்பாயால் சுற்றப்பட்டு இருந்தது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் நடத்திய விசாரணையில், மது குடிக்கும் போது ஏற்பட்ட தகராறில் நண்பர்கள் ராஜேந்திரனை கொலை செய்தது தெரியவந்தது. இதனை அடுத்து ராஜேந்திரனின் நண்பர்களான மஞ்சு(26), மஞ்சுநாத்(25) ஆகிய இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில் குற்றவாளிகள் கூறியதாவது, கடந்த 24-ஆம் தேதி மஞ்சு ராஜேந்திரனின் செல்போனை அடகு வைத்து பணம் வாங்கியுள்ளார். இதனை அடுத்து மது குடித்துக் கொண்டிருந்தபோது ராஜேந்திரன் அவரது செல்போன் குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டது. இதில் கோப,ம் அடைந்த மஞ்சுவும் மஞ்சுநாத்தும் இணைந்து ராஜேந்திரனை தாக்கி கத்தியால் குத்தி கொலை செய்து பிளாஸ்டிக் தார்பாயால் அவரது உடலை மூடி கிணற்றில் வீசிவிட்டு தப்பி சென்றது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.