மதுரை மாவட்டத்தில் உள்ள டி.கல்லுப்பட்டி பகுதியில் ரவி- ருக்குமணி(70) தம்பதியினர் வசித்து வருகின்றனர். நேற்று மாலை மூதாட்டி வீட்டில் தனியாக இருந்தபோது 30 முதல் 40 வயது மதிக்கத்தக்க மூன்று பேர் அங்கு சென்றனர். அவர்கள் மூதாட்டியிடம் உங்களது கணவருக்கு அழைப்பிதழ் கொடுக்க வந்துள்ளோம். அவரது செல்போன் எண்ணை தாருங்கள் என கேட்டனர். இதனை நம்பி ருக்மணி தனது கணவரின் செல்போன் நம்பரை கொடுத்துள்ளார். அவர்கள் ரவிக்கு போன் செய்வது போல நடித்து வீட்டின் கதவை பூட்டினர்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி சத்தம் போடுவதற்குள் அவர்கள் கொலை செய்து விடுவோம் என மிரட்டி மூதாட்டி கை, கால்களை கட்டி போட்டு அவரது கழுத்தில் அணிந்திருந்த ஆறு பவுன் தங்க சங்கிலியை திருடிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் அக்கம் பக்கத்தினர் மூதாட்டியை மீட்டனர். இதுகுறித்து ருக்மணி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.