கன்னியாகுமரி மாவட்டத்திலிருக்கும் ஆதிகேசவபெருமாள் கோவிலில் சீக்கிரமாக கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று மதுரை ஐகோர்ட்டில் வக்கீல் சத்திய சிங் தெரிவித்துள்ளார்.
சென்னை நகரத்தில் ஜெகநாத் என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் ஜெகநாத் மதுரை ஐகோர்ட்டில் மனு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது; கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆதிகேசவ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் பல ஆண்டுகள் பழமையானதோடு மட்டுமல்லாமல் 108 வைணவத் தலங்களிலில் ஒன்றாக திகழ்கிறது. இவ்வாறு சிறப்பு வாய்ந்த கோவிலில் இன்னும் கும்பாபிஷேகம் நடத்த படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும் இக்கோவிலுக்கு பாத்தியப்பட்ட சொத்துக்களை தனிநபர்கள் கைப்பற்றி வைத்துள்ளார்கள்.
எனவே இக்கோவிலின் திருப்பணிகளை விரைவாக முடித்து கும்பாபிஷேகத்தை நடத்துவதற்கும், கோவில் சொத்துக்களை தனிநபரிடமிருந்து பெற்று கோவில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவிற்காக வக்கீல் சத்திய சிங் மதுரை ஐகோர்ட்டில் கோவிலின் சார்பாக நீதிபதிகள் முன்பு ஆஜராகியுள்ளார். அப்போது அவர் கோவிலில் திருப்பணிகள் 75% நிறைவேறி விட்டதாகவும் கூடிய விரைவில் கும்பாபிஷேகம் நடத்தப்படும் என்று கூறியுள்ளார். இதையொட்டி நீதிபதிகள் இவ்வழக்கை வருகின்ற 15ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்கள்.