பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், திருவரங்கம் கல்லூரி உட்பட சுமார் 41 அரசு கல்லூரிகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு நிலுவை மற்றும் ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். மேலும் திருவரங்கம் உள்ளிட்ட 10 கலை கல்லூரிகளில் கடந்த 4 மாதங்களாக கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியம் வழங்கப்படாததால் தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் பல்கலைக்கழகமோ, அரசோ அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இல்லை. அதற்கு மாறாக போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கிறது. மேலும் கல்லூரிகளில் பணியாற்றுபவர்களுக்கு மாத ஊதியம் ரூ.15,000 மட்டுமே இருந்து வந்தது அதுவும் கடந்த நான்கு மாதங்களாக வழங்கப்படாததால் அனைவரும் தங்களது எதிர்காலத்தை தொலைத்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கிட்டத்தட்ட 1500-க்கும் மேற்பட்ட கவுரவ விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை இப்படி போராட்ட விட்டு வேடிக்கை பார்ப்பது நியாயமா ? என்று அன்புமணி ராமதாஸ் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளார். மேலும் பல்கலைக்கழகங்களுக்கும் அரசுக்கும் இடையே நடக்கும் போட்டியில் கவுரவ விரிவுரையாளர்கள் தான் வறுமையுடன் போராடி கொண்டிருகின்றனர்.
அதேசமயம் கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதியத்தை வழங்கியே ஆக வேண்டும் என்று பல்கலைக்கழகங்களை கட்டாயப்படுத்தினால் பல்கலைக்கழகங்கள் முடங்கி விடும் அபாயம் உள்ளது. எனவே அரசு முன்வந்து 41 அரசு கல்லூரி பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வு நிலுவை மற்றும் ஊதிய தொகையை உடனே வழங்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.