கொரோனா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெறக் கோரி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் 2020 ஏப்ரல் 25ஆம் நாள் குளச்சல் தனிப்படை காவலர்கள் ஊரடங்கு ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது முள்ளூர்துறையில் இருந்த இளைஞர்களுக்கும், காவலர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு அவர்கள் காவல் துறையினரின் வாகனத்தையும் தாக்கியுள்ளனர். இதனால் அங்கிருந்த 30க்கும் மேற்பட்டோர் மீது புதுக்கடை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்தனர். தற்போது அந்த வழக்கினை திரும்ப பெறக்கோரி தேங்காய்பட்டணம் முள்ளூர்துறையில் உள்ள தூய லாரன்ஸ் திருச்சபை பங்கு பேரவை சார்பில் கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவில் பொதுமக்களின் நலனுக்காக அரசு விதிக்கும் சட்டத்தையும், காவல்துறையினரின் விதிமுறைகளையும் ஒத்துழைக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவரின் கடமையாகும். பொதுவாக எங்கள் ஊரில் இதுபோன்ற எந்தவித சண்டைகளும் நிகழ்வுகள் இதற்கு முன்னர் நடந்தது இல்லை எனவும், இனிமேலும் இது போன்ற ஒரு நிகழ்வு வருங்காலத்திலும் ஏற்படாது எனவும் கூறியுள்ளனர். ஆதலால் இந்நிகழ்விற்காக ஊர் மக்கள் அனைவரும் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறோம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரால் இளைஞர்கள் மீது போடப்பட்ட வழக்கு பிழைப்பிற்காக வெளிநாட்டிற்கு வேலை தேடி செல்லும் அவர்களுக்கு கடவுச்சீட்டு எடுக்க முடியாமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே இளைஞர்களின் நலன் கருதி அவர்கள் எதிர்காலத்தை மனதில் வைத்து கொண்டு வழக்கை திரும்ப பெற வேண்டும் என அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.