உக்ரைன்-ரஷ்யா இடையே பல ஆண்டுகளாக மோதல் இருந்து வருகிறது. இதன் காரணமாக, தனது நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தி கொள்வதற்கு நேட்டோ நாடுகள் அமைப்பில் இணைய உக்ரைன் விருப்பம் தெரிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் ரஷ்யா, உக்ரைன் எல்லையில் 1.50 லட்சம் ராணுவ வீரர்களை குவித்தது. இதற்கு அமெரிக்கா மற்றும் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன.
இந்நிலையில், உலக நாடுகள் எதிர்பார்த்தது போலவே உக்ரைன் மீது போர் தொடுக்க ரஷ்ய ராணுவத்துக்கு அதிபர் புடின் கடந்த 24-ஆம் தேதி அன்று உத்தரவிட்டார். இதையடுத்து ரஷ்யா-உக்ரைன் இடையே பயங்கர போர் வெடித்தது. இதனால் உலக நாடுகள் பெரும் அதிர்ச்சியில் உள்ளன. அதோடு மட்டுமில்லாமல் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலைய செய்துள்ளது.
இந்த நிலையில் ரஷ்ய துருப்புகளை வழி மாற்றுவதற்காக சாலைகளை கட்டுவதற்கும் பராமரிப்பதற்கும் பொறுப்பான உக்ரேனிய நிறுவனம் ஒன்று, சாலையில் உள்ள அறிவிப்பு பலகைகள் & அடையாளங்களை அகற்ற தொடங்கியுள்ளது. “அவர்களுக்கு நேராக நரகத்திற்கு செல்ல உதவுவோம்” என்று கூறி, அனைத்து சாலை அடையாளங்களையும் அகற்றும்படி உள்ளூர் அதிகாரிகளை அந்நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது. உக்ரேனியர்கள் ஒவ்வொருவரும் போரில் தங்கள் பங்களிப்பை செலுத்த முயல்வதையே இது சுட்டிக்காட்டுகிறது.