நீச்சல் பழக சென்ற மாணவன் கிணற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் லக்கம்பாளையத்தில் வசித்து வரும் பூபதி என்பவர்க்கு தினேஷ்குமார்(17) என்ற மகன் உள்ளார். இவர் அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று தினேஷ்குமார் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கிணற்றில் நீச்சல் கற்று கொள்வதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அப்போது கிணற்றில் குளித்து கொண்டிருந்த தினேஷ்குமார் திடீரென நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 1/2 மணி நேரம் போராடி கிணற்றில் மூழ்கி பலியான மாணவரின் உடலை மீட்டனர்.
இதனையடுத்து நாமக்கல் போலீசார் தினேஷ்குமாரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே தினேஷ்குமாரின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் நண்பர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.