ஏர்பஸ் ஏ320-200 ரக வர்த்தக விமானம் ஒன்று கொலம்பியாவில் உள்ள ரியோநிக்ரோ என்ற பகுதியில் அமைந்துள்ள ஜோஸ் மரியா கார்டோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றுள்ளது. இந்த விமானம் லாத்தம் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தைச் சேர்ந்தது. இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற போது ஒரு சில நிமிடங்களிலேயே அதிலிருந்த விமானம் தரையிறங்க உதவும் கியர் ஒன்று கீழே விழுந்துள்ளது. இதன் காரணமாக அந்த விமானம் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பி வந்துள்ளது.
இந்த சம்பவத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என்று விமான போக்குவரத்து துறை இயக்குனர் ஜெய்ர் ஆர்லேண்டோ பஜர்டு தகவல் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தையடுத்து 12 மணி நேரத்துக்கும் கூடுதலாக ரியோநிக்ரோவில் இருந்து செல்லும் மற்றும் ரியோநிக்ரோவுக்கு வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் விமான சேவை ரத்து மற்றும் மற்ற விமான நிலையங்களில் காலதாமதம் ஏற்பட்டது. மேலும் 136 விமானங்கள் வரை ரத்தாகியுள்ளது. இதனால் சுமார் 21,245 பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.