நண்பர்கள் இணைந்து கூலி தொழிலாளியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள மலையப்பன்பட்டி பகுதியில் கருப்பையா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலித் தொழிலாளியான சாமிதுரை என்ற மகன் இருந்துள்ளார். இவர்களது வீட்டிற்கு அருகில் தக்காளி வியாபாரியான மருது பால் சாகிப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மருது பால் சாகிப் நல்லவர் இல்லை எனவும், அவருக்கு பெண் கொடுக்க வேண்டாம் எனவும் சாமிதுரை பெண் வீட்டாரிடம் கூறியதாக தெரிகிறது. இது திருமணம் முடிந்த பிறகு தான் மருது பால் சாகிப்பிற்கு தெரியவந்துள்ளது. இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு காவல்நிலையத்தில் தனித்தனியாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணைக்காக இருதரப்பினரையும் காவல் நிலையத்திற்கு அழைத்தனர். இந்நிலையில் காவல் நிலையத்திற்கு செல்வதாக கூறி விட்டு வீட்டை விட்டு வெளியே சென்ற சாமிதுரை வத்தலகுண்டு-மதுரை சாலையில் இருக்கும் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே நின்று கொண்டிருந்தார். அப்போது மருது பால் சாகிப் தனது நண்பரான உதயகுமார் என்பவருடன் இணைந்து சாமி துரையை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். அவர்களிடமிருந்து தப்பிப்பதற்காக சாமிதுரை வேகமாக ஓடியுள்ளார். ஆனாலும் மருது பால் சாகிப்பும், உதயகுமாரும் இணைந்து சாமிதுரையை ஓட ஓட விரட்டி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமி துரையின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சாகிப் மற்றும் உதயகுமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் நண்பர்கள் இணைந்து சாமி துரையை கொடூரமாக வெட்டிய சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.