மதுரை எம்பி சு வெங்கடேசனை அவன் இவன் என்று அமைச்சர் கே என் நேரு பேசியிருப்பது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது.
அமைச்சர் கே என் நேரு மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம் பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியதாக ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. திருச்சியைச் சேர்ந்த கே என் நேரு எதார்த்தமாக இயல்பாக பேசக்கூடியவர். வாய்க்கு வந்ததை சட்டென்று பேசிவிடுவார். அதுவே அவருக்கு சில நேரங்களில் சிக்கலாக வந்துவிடும். அடிக்கடி எதையாவது சர்ச்சையாக பேசி சிக்கிக் கொள்வது தான் அவரது பழக்கம். இதனால் தேவையில்லாமல் திமுகவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இப்படி தான் தற்போது இன்னொரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்தமுறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி வெங்கடேசனை அவன் இவன் என்று பேசியுள்ளார்.
செய்தியாளர் இவரிடம் ஒரு கேள்வி கேட்க, அதற்கு யாரிடம் கேட்க வேண்டுமோ? அவர்களிடம் கேளுங்கள். வெங்கடேசன் ஒருத்தன் இருக்கான்…. அவன் கிட்ட கேளுங்க… என்று சொல்லியுள்ளார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மதுரை மக்கள் மத்தியில் மதிப்புக்கு உரியவராக இருக்கும் வெங்கடேசன் மதுரை எம்பியாக இருந்தாலும் தமிழக நலன் சார்ந்த பல்வேறு செயல்களை செய்து வருகிறார். அப்படிப்பட்டவரை இப்படி ஒருமையில் பேசுவது சரியா? என்று பலரும் விமர்சனங்கள் செய்துவருகின்றனர்.
கட்சியில் மூத்த தலைவரான நேரு இப்படி தொடர்ந்து சர்ச்சையாக பேசிக்கொண்டிருப்பதை முதல்வர் முக ஸ்டாலின் கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது. என்னதான் மனதில் பட்டதை இயல்பாக பேசக்கூடியவர் என்றாலும், கண்ணியமாக பேசுவது தானே முறை? எனவே நேருவுக்கு வாய்ப்பூட்டு போடுவாரா ஸ்டாலின் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.