நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே கல்லூரி மாணவி கடத்தி செல்லப்பட்டதாக தாய் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருப்பூண்டி பப்புசெட்டி தெருவில் பாப்பையன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகள் மாரியம்மாள். இவர் மூன்றாம் ஆண்டு பட்டப் படிப்பை நாகையில் உள்ள பாரதிதாசன் யூனிவர்சிட்டியில் படித்து வருகிறார். இந்நிலையில் சம்பவத்தன்று மாரியம்மாள் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால் அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இதுகுறித்து கீழையூர் காவல்நிலையத்தில் அவரது தாய் சின்ன பொண்ணு புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அவர் அதே பகுதியில் வசித்து வரும் ராமச்சந்திரன் (22) என்பவர் தனது மகளை கடத்திச் சென்றுவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அவரிடமிருந்து எனது மகளை மீட்டு கொடுங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.