உத்திரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் வேளாண் சட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் துணை முதல்வர் அப்பகுதியில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அப்பொழுது விவசாயிகள் பாஜகவினர் மற்றும் துணை முதல்வருக்கு கருப்புக்கொடி காட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். இதற்கு முன்பு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்தினரை நேரில் சந்திக்க சென்ற பொழுது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார்.
இதன்பின்னர் அவருக்கு அனுமதி கிடைத்தவுடன் விவசாயிகளின் குடும்பத்தை சந்தித்து தனது ஆறுதலை தெரிவித்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை லக்னோவில் சந்தித்தார், அப்போது அவர் பேசியதாவது, “லக்கிம்பூர் கலவரம் தொடர்பாக விசாரணை ஆணையம் ஆனது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைப்பதை விட, பதவியில் இருக்கும் உச்ச நீதிமன்ற நீதிபதி அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் அமைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மேலும் இழப்பீடு எதையும் விவசாயிகள் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு தேவையானது நீதி மட்டுமே. நீதி கோருவது ஜனநாயக மக்களின் உரிமையாகும்.
இதைத்தொடர்ந்து விசாரணையானது பாரபட்சம் பார்க்காமல் நேர்மையாக நடைபெற வேண்டும். முதலில் மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா தனது பதவியிலிருந்து விலக வேண்டும். இதன்பின்னர் அவரது மகனும் கைது செய்யப்பட வேண்டும். மேலும் இவரது போராட்டமானது மத்திய உள்துறை இணை அமைச்சர் பதவிநீக்கம் செய்யும் வரையும், அவரது மகன் கைது செய்யப்படும் வரையில் போராட்டம் தொடரும்” என பிரியங்கா காந்தி உறுதிபட கூறியுள்ளார்.