விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், புதிய அரசு அமைந்ததையடுத்து திசா கூட்டம் தற்போது நடைபெற்றுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் இந்த கூட்டத்தில் மாநில அமைச்சர்கள் கலந்து கொள்ளவில்லை.
ஆனால் தற்போது இரண்டு அமைச்சர்களும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளே என்ன பேசுகிறார்? வெளியே என்ன பேசினார்? என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான். அவருடைய பேச்சுக்கள் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அவர் பேசியதை சீரியசாக எடுத்துக் கொண்டால் அது நமக்கு காமெடியாக போய்விடும். வடிவேலு இல்லாத நாட்களில் நமக்கு ஒரு பொழுது போக்கு அண்ணாமலை மட்டும்தான் என்று சரமாரியாக விமர்சனம் செய்துள்ளார்.