எடப்பாடி பழனிச்சாமி நேற்று புழல் சிறையில் உள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை சந்தித்து பேசியுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னையில் உள்ள திமுக பிரமுகர் ஒருவர் தாக்கப்பட்டார். இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை, முன்னாள் முதல்வரும், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சந்தித்து பேசியுள்ளார். அதன்பின் அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, கள்ள ஓட்டு போட்ட திமுக பிரமுகரை பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்த ஜெயக்குமாரை, கைது செய்து சிறை தண்டனை வழங்கியுள்ளது. இப்போதுள்ள திமுக சர்வாதிகார அரசாங்கம் என்று கூறியுள்ளார்.
மேலும் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் எதிர்க்கட்சிகளை பழிவாங்கும் நோக்கத்தில், இவ்வாறு செய்துள்ளதாகவும் இதனை வன்மையாக நாங்கள் கண்டிக்கிறோம் என்று கூறினார். மேலும் கள்ள ஓட்டு போட்டு கொள்ளையடித்த பணத்தில் 5 ஆயிரம் வரை வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்களை திமுக கொடுத்து இந்த தேர்தலில் வெற்றி பெற்று உள்ளதாக கூறியுள்ளார். இதனால் ஜனநாயகம் இந்த தேர்தலில் படுகொலை செய்யப்பட்டுள்ளது.
மேலும் கள்ள ஓட்டு போட முயன்ற திமுக பிரமுகர் 10க்கும் மேற்பட்ட வழக்கில் தொடர்புடையவர் எனவும் ஏற்கனவே குண்டர் சட்டத்தில் கைதாகி உள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது. சென்னை மாநகர காவல் ஆணையர் கூறியபடி, தேர்தலுக்கு முன் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யாதது தான் கள்ள ஓட்டு பதிவானதற்கான காரணம் என கூறியுள்ளார். நிச்சயமாக வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்துள்ளதாகவும், இதனால் தான் திமுக வெற்றி பெறுவதாகவும், இதற்கு தேர்தல் ஆணையம் மற்றும் காவல்துறை உதவி செய்துள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.