ஓ.பன்னீர்செல்வம் நிதானமாக சிந்தித்து பேசக்கூடியவர் மேலும் அவர் கூறிய கருத்துக்கள் அனைத்தும் சரியாகத்தான் இருக்கும் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
நேற்று அமமுக பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் மண்டல வாரியாக நிர்வாகிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த பிறகு அவர் நிருபர்களிடம் பேட்டியளித்தார். அதில் கூறியதாவது, அமமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்து இருப்பதாகவும் இந்த தோல்வி அவர்களை சோர்வடைய செய்யவில்லை எனவும் மேலும் உத்வேகத்துடன் அமமுக தொண்டர்கள் செயல்படுவார் எனவும் கூறினார்.
மேலும் சசிகலா தான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதாகவும் மேலும் அதிமுகவை மீட்டெடுப்பது எங்களுடைய இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் எதையும் நிதானமாக சிந்தித்து முடிவு எடுக்க கூடியவர் எனவும் அவர் பேசிய கருத்துக்கள் எதுவும் தவறாக இருக்காது எனவும் கூறினார். எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசிய அவர் எடப்பாடி அவர்கள் தற்போது அரசியல் ரீதியாக நொந்துபோய் இருப்பதாகவும் மேலும் அவர் யார் மூலமாக முதலமைச்சர் பதவியை பெற்றார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர் ஜெயலலிதாவின் மரணம் குறித்த விசாரணையால் மக்களின் வரிப்பணம் தான் வீணாகிறது எனவும் ஜெயலலிதா நோய்வாய்பட்டு இயற்கை மரணம் எய்தினார் என்பது அனைவருக்கும் தெரியும் எனவும் கூறினார்.திமுகவும் மற்றும் சில அரசியல் ஆசை படித்தவர்களும் இந்த வழக்கை தொடர்ந்து வருகின்றனர் எனவும் அவர் கூறினார். மேலும் பேசிய அவர் 1988 ஆம் ஆண்டு முதல் போயஸ் கார்டனில் தான் இருந்ததாகவும் ஜெயலலிதாவுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை எனவும் வீணாக வதந்திகளை பரப்ப வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.