கணவரை கொன்று மனைவி தற்கொலை நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அரும்பாக்கம் பகுதியில் ஆனந்தகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தனலக்ஷ்மி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் குடிப்பழக்கத்திற்கு அடிமையான ஆனந்தகுமார் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். மேலும் தனலட்சுமியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு ஆனந்தகுமார் அவருடன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்ட போது ஆனந்தகுமார் தனலட்சுமியை இரும்பு கம்பியால் தாக்க முயற்சி செய்துள்ளார். அப்போது கோபம் அடைந்த தனலட்சுமி அந்த இரும்புக் கம்பியை பறித்து ஆனந்தகுமாரின் தலையில் ஓங்கி அடித்துள்ளார். மேலும் அனந்தகுமாரின் கழுத்தை இறுக்கி தனலட்சுமி அவரை கொலை செய்துள்ளார்.
இதுகுறித்து அறிந்ததும் தனலட்சுமியின் சகோதரர் முருகனும், அவரது நண்பர்களும் அங்கு சென்றுள்ளனர். இவர்கள் ஆனந்தகுமாரின் சடலத்தை தூக்கில் தொங்க விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதற்கிடையில் ஆனந்தகுமார் தன்னை கத்தியால் வெட்டியதாக கூறி தனலட்சுமி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தனலட்சுமி கணவரை கொன்று தற்கொலை நாடகமாடியது தெரியவந்துள்ளது. அதன்பின் காவல்துறையினர் தனலட்சுமி, முருகன், அவரது நண்பர் ஹேமந்த் குமார் ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.