ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரி விதிக்க தடை கேட்ட நடிகர் விஜய்க்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த அபராத தொகையை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு இரண்டு வாரத்தில் செலுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது . இதற்கு சமூக வலைத்தளங்களில் ஒரு சிலர் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் கார்த்திக் சிதம்பரம், வரி குறைப்பு கேட்பது இந்திய குடிமகனின் உரிமை என்று நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்தார். இதனை தொடர்ந்து ஓ.பன்னீர் செல்வத்தின் மகன் விஜய பிரதீப் நடிகர் விஜய்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதன்படி, உழைப்பால் உயர்ந்தவர்கள் அனைவரையும் நாம் மனதார பாராட்ட வேண்டும். விஜய் அவர்கள் சினிமா துறையில் தன்னுடைய சொந்த உழைப்பால் உயர்ந்து தான் வாங்கும் சம்பளத்திற்கு முறையாக வருமான வரி செலுத்தி வருபவர்.
எப்போதும் ஒரு மனிதருடைய சின்ன சின்ன தவறுகளை மிகைப்படுத்தி பேசுவது இயல்பாகவே இருக்கிறது. அவர் இறக்குமதி செய்த வாகனங்களுக்கு வரி விலக்கு கேட்பது அவரவரின் உரிமை. இந்த உரிமை நடிகர் விஜய்க்கும் இருக்கிறது. அவர் நடிகர் என்பதால் அவருக்கு இது பொருந்தாது என்பது எதுவும் கிடையாது. எனவே சரிவரப் புரிந்து கொள்ளாமல் தவறான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.