ஜூலன் கோஸ்வாமியின் இன்ஸ்விங் எனக்கு சவாலாக இருந்தது என்று இந்திய ஆடவர் அணி கேப்டன் ரோஹித் சர்மா புகழ்ந்து பேசியுள்ளார்…
இந்திய கிரிக்கெட்டின் ஆல் டைம் ஜாம்பவான்களில் ஒருவரான ஜூலன் கோஸ்வாமி 250க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடி இருக்கிறார்.. தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 ஒருநாள் தொடருக்கு பின் ஓய்வை அறிவிக்க இருக்கிறார்.. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் ஒருநாள் போட்டியில், கோஸ்வாமி மீண்டும் தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார்.. 10 ஓவர்கள் வீசி 20 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டும் வீழ்த்தியிருந்தார். டாஸ் வென்ற இந்தியா பந்து வீச முடிவு செய்தது.. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து மகளிர் அணியை 227/7 என்று கட்டுப்படுத்தியது இந்தியா. பின்னர் ஆடிய இந்திய மகளிர் அணியின் தொடக்க வீரர் ஸ்மிருதி மந்தனா 91 ரன்களும், யாஸ்திகா பாட்டியா50 ரன்களும், ஹர்மன்ப்ரீத் கவுரின் 74* ரன்களும் எடுக்க 44.2 ஓவர்களில் 232/3 ரன்கள் எடுத்து வென்றது.
இந்நிலையில் 39 வயதான ஜூலன் கோஸ்வாமி குறித்து இந்திய ஆடவர் அணியின் கேப்டன் ரோஹித் சர்மா தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தியாவின் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு முன்னதாக செய்தியாளர் கூட்டத்தில் கூறியதாவது, நான் என்சிஏவில் (NCA) காயமடைந்து இருக்கும்போது அவரை சிலமுறை மட்டுமே சந்தித்துள்ளேன், அவர் எனக்கு பந்துவீசினார். “அவருடைய இன்ஸ்விங்கரால் நான் சவால் செய்யப்பட்டேன், பார்க்க நன்றாக இருந்தது. அவர் பலம் வாய்ந்தவர் என்றார்.
மேலும் இந்தியாவுக்கான முன்னணி பந்துவீச்சாளர் என்ற அடிப்படையில் அவர் இந்தியாவின் முன்னணி வீராங்கனைகளில் ஒருவர் என்று நான் நினைக்கிறேன். அவர் விளையாடுவதை நான் பார்க்கும் போதெல்லாம், அவர் எப்போதும் நாட்டின் மீது மிகுந்த ஆர்வத்தை வெளிப்படுத்தினார், இது அனைவருக்கும் ஒரு நல்ல கற்றல். பெண்கள் கிரிக்கெட் அல்லது ஆண்கள் கிரிக்கெட்டாக இருந்தாலும், நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்த விரும்பும் இளம் குழந்தைகள் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், அவருக்கு எவ்வளவு வயதாகிறது என்று எனக்குத் தெரியவில்லை, இந்த வயதிலும், அவர் இவ்வளவு வேகமாக ஓடி எதிரணியை வீழ்த்த முயற்சிக்கிறார். இதனைப்பார்க்கும் போது அவர் கிரிக்கெட் மீது வைத்துள்ள ஆர்வத்தை காட்டுகிறது” அவரது எதிர்காலம் சிறந்ததாக இருக்க வேண்டும் என்று நான் வாழ்த்துகிறேன், எல்லா நேரங்களிலும் இதுபோன்ற ஒரு வீரரை நீங்கள் காண முடியாது. ஒரு தலைமுறைக்கு ஒருமுறை தான் இப்படி பட்ட வீரர்கள் கிடைப்பார்கள்.
அவரது எதிர்கால வாழ்க்கைக்கு பெரிய, பெரிய வாழ்த்துக்கள். மிதாலி ராஜ் மற்றும் ஜூலன் ஆகியோர் இந்திய பெண்கள் கிரிக்கெட்டை வேறு உயரத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். தற்போதைய அணி அந்த பாரம்பரியத்தை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிக்கிறது, அவர்கள் சில நல்ல கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். பார்க்க மிகவும் உற்சாகமாக இருக்கிறது,” என்று முடித்தார்.