ஆளுநரை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7பேர் விடுதலை தொடர்பான வழக்கில் ஆளுநரின் முடிவு குறித்து கருத்து தெரிவித்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், ஆளுநர் அவர்கள் அரசமைப்புச் சட்டம் 161ன் படி முடிவெடுக்கக் கூடிய அதிகாரத்தை பெற்றிருக்கிறார் என்று உச்சநீதிமன்றம் தெளிவாக கூறியிருக்கின்றது. இந்திய தலைமை வழக்கறிஞருடைய வாதம், பேரறிவாளனின் தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் ஆகியவற்றையெல்லாம் கேட்டு அதன் பின்னர் ஆளுநருக்கு தான் அதிகாரம் இருக்கின்றது,
எனவே அவர் ஒரு வார காலத்தில் முடிவெடுக்க வேண்டுமென்று திட்டவட்டமாக அறிவித்த பிறகு ஆளுனர் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பது, குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் இருப்பது என்று தட்டிக்கழித்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராகவும் செயல்பட்டி இருக்கிறார், மாநில உரிமைகளுக்கு எதிராகவும் செயல்பட்டிருக்கிறார், இன்னும் சொல்லப்போனால் மாநில அரசு தீர்மானம் நிறைவேற்றி அவரிடத்தில் ஒப்படைத்த நிலையில், அதனை நடைமுறைப் படுத்தாமல் 28 மாதம் காலம் தாழ்த்தியதன் மூலம் மாநில அரசின் தீர்மானத்தை அவமதித்து இருக்கிறார்.
எனவே மத்திய அரசு ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். அவர் இனிமேல் ஒரு நொடி கூட தமிழகத்தின் ஆளுநராக இருக்க தகுதி இழந்தவராக இருக்கிறார். எனவே பிரதமர் மோடி அவர்கள் தமிழக ஆளுநரை தமிழகத்தில் இருந்து திரும்பப் பெற வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சிகள் வலியுறுத்துகிறது.
பேரறிவாளனையும், இதர ஏழு பேரையும் விடுதலை செய்வதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆர்வம் இருந்தால், அக்கறை இருந்தால், அவர் உடனடியாக தன்னுடைய அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 பேரையும் காலவரம்பற்ற பரோலில் விடுதலை செய்ய வேண்டும். அந்த அதிகாரம் முதலமைச்சருக்கு இருக்கிறது. ஆகவே பரோலில் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.