மனைவி இறந்த சோகத்தில் தற்கொலை செய்துகொண்ட கணவன் முகநூலில் கடைசியாக உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
சென்னை ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள நடுக்குத்தகை திலீபன் நகர், அறிஞர் அண்ணா தெருவை சேர்ந்தவர் அரவிந்த்ராஜன் வயது 26 இவர் பி.எ பட்டப்படிப்பு முடித்துவிட்டு கூலி வேலை பார்த்து வந்துள்ளார். இவர் சென்ற 2016ம் ஆண்டு பட்டாபிராம் சத்திரம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்ற ஒரு பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு பவித்ரா அரவிந்த்ராஜனை பிரிந்து அம்மாவீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் கடந்த 15ம் தேதி பவித்ரா வீட்டில் திடீரென தூக்கு மாட்டிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதை அறிந்த அரவிந்த்ராஜன் கடந்த சில தினங்களாக மனைவி இறந்ததை நினைத்து அழுது புலம்பியவாறு இருந்துள்ளார்.
இதனால் நேற்று காலை அரவிந் தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவலறிந்து திருநின்றவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். விசாரணையில் அரவிந்த்ராஜன் தற்கொலை செய்வதற்கு முன்பு தனது முகநூல் பக்கத்தில், “எனது மனைவி பவித்ரா இறந்து விட்டாள். அவளது முகத்தை கூட பார்க்க என்னை அனுமதிக்கவில்லை. அவள் இல்லாமல் என்னால் வாழ முடியவில்லை நானும் அவள் இருக்கும் இடத்தை தேடி போகிறேன். எனது சாவுக்கு பவித்ராவின் அம்மாவும் அவரது மாமாவும் தான் காரணம் என்று பதிவிட்டுள்ளார்”. இது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.