தனியார் நிறுவன ஊழியர் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள பிராட்வே புத்திசாகிப் தெருவில் தனியார் நிறுவன ஊழியரான அப்துல் ரகுமான் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு யாஸ்மின் என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு யாஸ்மின் தூக்க மாத்திரை சாப்பிட்டு மயங்கி கிடப்பதாக கூறி அப்துல்ரகுமான் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு யாஸ்மினை பரிசோதித்து பார்த்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் யாஸ்மின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் யாஸ்மின் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி காவல்துறையினர் அப்துல் ரகுமானை பிடித்து விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்துள்ளது. அதாவது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் தற்கொலை செய்து கொண்டதாக அப்துல் ரகுமான் நாடகமாடியுள்ளார். அதாவது யாஸ்மினுக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இதனை அறிந்த அப்துல் ரகுமான் தனது மனைவியை கண்டித்ததால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபமடைந்த அப்துல்ரகுமான் யாஸ்மினுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்துள்ளார். இதனால் யாஸ்மின் அயர்ந்து தூங்கிய பிறகு அவரது கழுத்தை நெரித்து கொலை செய்து நாடகமாடியுள்ளார். இதனையடுத்து காவல்துறையினர் அப்துல் ரகுமானை கைது செய்து சிறையில் அடைத்துவிட்டனர்.