கடலூர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, 2023- ஆம் ஆண்டு உலக மகளிர் தினம் முன்னிட்டு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் சாதனை புரிந்த ஒருவருக்கு அவ்வையார் விருது வழங்கப்பட உள்ளது. தமிழக முதலமைச்சர் 8 கிராம் எடையில் தங்க பதக்கம், 1 லட்ச ரூபாய்கான காசோலை, மற்றும் சால்வை ஆகியவற்றை வழங்க உள்ளார். வருகிற 10-ஆம் தேதிக்குள் தகுதி வாய்ந்த நபர்கள் தமிழக அரசின் http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். விண்ணப்பதாரர்கள் தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டு, 18 வயதிற்கு மேற்பட்டவர்களாகவும், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலனை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவராகவும் இருத்தல் வேண்டும்.
மேலும் இனம், மொழி, கலை அறிவியல், பண்பாடு, நிர்வாகம் போன்ற துறைகளில் மேன்மையாக பணிபுரிந்து மக்களுக்கு தொண்டாற்றும் வகையில் செயல்பட்டு இருக்க வேண்டும். மேற்கூறிய தகுதி இருப்பவர்கள் சேவை பற்றிய செயல்முறை விளக்கம் புகைப்படங்களுடன், சேவை ஆற்றியதற்கான விரிவான அறிக்கை விவரம், சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் இருக்கும் காவல் நிலையத்தில் இருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை சமர்ப்பித்து பயன்பெறலாம் என கூறியுள்ளார் .