சித்தியின் அஸ்தியை கரைக்க சென்ற மின்வாரிய ஊழியர் காவிரி ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் மின் வாரிய குடியிருப்பு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். மின்வாரிய ஊழியரான இவருக்கு மஞ்சு என்ற மனைவியும், சுவேதா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சுரேஷ் தனது சித்தியின் துக்க நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு குடும்பத்துடன் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்திற்கு சென்றுள்ளார். இதனையடுத்து அவரது சித்தியின் உடலை அடக்கம் செய்துவிட்டு அஸ்தியை கரைப்பதற்கு உறவினர்களுடன் காவிரி ஆற்றுக்கு சென்றுள்ளனர்.
இதனையடுத்து அஸ்தியை கரைப்பதற்கு ஆற்றில் இறங்கியபோது திடீரென சுரேஷ் நீரில் மூழ்கியுள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சுரேஷை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அவரை மீட்க முடியாததால் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மீனவர்களின் உதவியுடன் சுரேஷை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
இதனைதொடர்ந்து சுமார் ஒரு 1 நேரத்திற்கு பிறகு தண்ணீரில் மூழ்கி சுரேஷை பிணமாக மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இதனை அறிந்து சென்ற குமாரபாளையம் காவல்துறையினர் சுரேஷின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.