திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் புதிய ரேஷன் கடை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் பகுதிநேர ரேஷன் கடை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அமைச்சர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் மாநில அரசுகளின் தனிப்பட்ட உரிமைகளில் மத்திய அரசானது தலையிடுகிறது. இந்த மத்திய அரசின் நடவடிக்கைகளில் தலையிட்டு அதை எதிர்க்கும் ஒரே ஒரு முதல்வர் என்றால் அது நம் முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான். மத்திய அரசின் ஆதிக்கம் மற்றும் அராஜகத்தை தமிழக முதல்வர் மட்டும்தான் தட்டி கேட்கிறார். மத்திய அரசை கண்டித்தும் எதிர்த்தும் அதிமுக கட்சியினர் எதுவும் செய்ய மாட்டார்கள். அவர்கள் மக்களை ஏமாற்றுவதற்காக நாடகம் போடுகின்றனர்.
இதனையடுத்து உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டது அதிமுக ஆட்சியின் போது அம்மா ஜெயலலிதா தான். இந்த உதய் மின் திட்டத்தில் மத்திய அரசின் வலியுறுத்தலின் பேரில் கையெழுத்திடப்பட்டுள்ளது. கடந்த 7 ஆண்டுகளில் மின் கட்டணத்தை உயர்த்தாததும், உதய் மின் திட்டத்தில் கையெழுத்திட்டதும்தான் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டதுக்கு காரணமாகும். தமிழக ரேஷன் கடைகளில் வேலைப்பார்த்த ஊழியர்களுக்கு 28% பஞ்சபடியை உயர்த்துக் கொடுத்தது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான். மேலும் அதிமுக ஆட்சியில் மத்திய அரசுக்கு அடிமையாக இருந்தார்களே தவிர வேறு எதையும் செய்யவில்லை என்று கூறினார்.