தமிழக கவர்னர் ஆர்.என். ரவிக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டது என முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டசபை கூட்டத்தின் போது முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஓ. பன்னீர்செல்வம், பா.ஜ.க நிர்வாகி நயினார் நாகேந்திரன், காங்கிரஸ் கட்சியின் செல்வபெருந்தகை ஆகியோர் கவர்னரின் பாதுகாப்பு குறித்து பேசினர். இதற்கு மு.க ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அதாவது தமிழக கவர்னர் தர்மபுரம் ஆதீனத்தைப் பார்ப்பதற்காக திருக்கடையூர் கோயிலில் இருந்து சென்ற போது அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றது. இந்தப் போராட்டத்தின் போது அவருடைய வாகனத்தின் மீது கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஆனால் இந்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் பொய்யானவை. இதில் எவ்வித உண்மைகளும் இல்லை. இது தொடர்பாக கூடுதல் டி.ஜி.பி ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்ட அறிக்கையின்படி கவர்னர் பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்பட்டதாகவும், அவரின் வாகனத்தின் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் கவர்னருக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என முன்னாள் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் குற்றம் சாட்டுகின்றனர்.ஆனால் எங்கள் ஆட்சியில் கவர்னருக்கு வழங்க வேண்டிய பாதுகாப்புகள் காவல்துறையினரின் மூலமாக வழங்கப்பட்டிருக்கிறது.
அ.தி.மு.க ஆட்சியில் கவர்னராக இருந்த சொன்னா ரெட்டிக்கு என்ன நடந்தது என்பது எல்லோருக்கும் தெரியும். கடந்த 1995-ம் ஆண்டு திண்டிவனத்தில் சொன்னா ரெட்டியின் வாகனம் நிறுத்தப்பட்டு, அ.தி.மு.க எம்.எல்.ஏக்கள் 4 பேர் தலைமையில் முட்டை, தக்காளி, கற்கள் போன்றவைகள் வீசப்பட்டது. அன்று சொன்னா ரெட்டி உயிர் பிழைத்ததே அதிசயம் என்று அன்றைய செய்தித் தாள்களில் வந்திருந்தது. இதேப்போன்று தலைமை தேர்தல் அதிகாரியான மறைந்த டி.என் சேஷன் தாஜ் ஹோட்டலில் இருந்த போது அவருக்கு என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். அதன்பிறகு பெண் ஐஏஎஸ் அதிகாரி சந்திரலேகா மீது ஆசிட் வீசியது யாருடைய ஆட்சியில்? இது எல்லாமே அ.தி.மு.க ஆட்சியில் தான் நடந்தது.
எனவே இந்த அரசைப் பொறுத்தவரையில் அவர் மீது ஒரு தூசு கூட படாமல் காவல்துறையினர் கவர்னரை பாதுகாப்பாக அழைத்துச் சென்றிருக்கின்றனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு விசாரணை நடந்து வருகிறது. எனவே கவர்னரின் வாகனம் மீது கற்கள், முட்டை, தக்காளி போன்றவைகள் வீசியதாக கற்பனையான குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகள் தெரிவிக்க வேண்டாம். மேலும் முன்னாள் முதலமைச்சர் வெளிநடப்பு செய்த இருந்தாலும் அவருக்கு இந்த செய்தி போய் சேரும் என நம்புகிறேன். இது குறித்த விளக்கம் இதுவே போதும் என நினைக்கிறேன் என கூறினார்.