பொதுச் செயலாளருக்கு கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க கட்சியின் பொதுச் செயலாளருமான அம்மா ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு அ.தி.மு.கவில் பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டது. அதற்கு பதிலாக இரட்டை தலைமை கொண்டுவரப்பட்டு எடப்பாடி பழனிச்சாமி இணை ஒருங்கிணைப்பாளராகவும், ஓ. பன்னீர்செல்வம் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்து கட்சியை நிர்வகித்து வந்தனர். ஆனால் அ.தி.மு.கவில் திடீரென ஒற்றைத் தலைமை பிரச்சனையானது விஸ்வரூபம் எடுத்ததால், எடப்பாடி பழனிச்சாமியும், ஓ. பன்னீர்செல்வமும் எதிர் எதிர் துருவங்களாக மாறி ஒருவருக்கொருவர் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. அதில் அ.தி.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரையில், இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு கட்சியின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக ஓ.பி.எஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் அனைத்து பதவிகளில் இருந்தும் நீக்கப்பட்டு கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர்.
இதனையடுத்து தற்போது பொதுச்செயலாளருக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி நிர்வாகப் பொறுப்புகளை கவனிப்பது, துணை பொதுச்செயலாளர் மற்றும் பொருளாளரை நியமிக்கும் அதிகாரம், தலைமை கழக நிர்வாகிகள், பொருளாளர் மற்றும் அவைத் தலைவர்கள் கொண்ட செயற்குழுவை உருவாக்குதல் போன்ற பணிகளை கொண்டிருப்பார்.
அதுமட்டுமின்றி பொதுக்குழு, செயற்குழு நடைபெறாத நேரங்களில் முடிவெடுக்கும் அதிகாரம், கட்சியின் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் மற்றும் கட்சியிலிருந்து நீக்கும் அதிகாரம், உட்கட்சி தேர்தலை நடத்துதல், வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்குதல், வரவு – செலவு கணக்கை ஆராய்தல், கட்சியின் தேவைக்கேற்ப வங்கிகளில் கடன் வாங்குதல் போன்ற அதிகாரங்களும் உண்டு. மேலும் அ.தி.மு.க கட்சியில் பெண் நிர்வாகிகளை நியமிக்கும் பொறுப்பும் பொது செயலாளரையே சேரும்.