அ.தி.மு.க-வுக்குள் ஒற்றைத் தலைமை விவகாரம் முற்றியதையடுத்து பொதுக்குழு கூட்டத்திற்கு தடைவிதிக்க கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தாக்கல் செய்தார். இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர்மோகன் அமர்வு பொதுக்குழுவை கூட்டலாம். ஒருங்கிணைப்பாளரால் ஒப்புதல் வழங்கப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர்த்து வேறு எந்த தீர்மானமும் நிறைவேற்றக்கூடாது. இதையடுத்து வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம். எனினும் எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தனர்.
அதன்பின் அ.தி.மு.க.,-வின் பொதுக்குழு சென்ற 23 ஆம் தேதி வானகரத்தில் நடைபெற்றது. பொதுக் குழுவில் ஒற்றைத் தலைமை விவகாரமானது பலமாக வெடித்தது. நீதிமன்றம் தீர்ப்பு ஓ.பி.எஸ்.ஸுக்கு துணை இருந்தாலும் பொதுக்குழுவில் ஏராளமானோர் ஒற்றைத் தலைமை என்ற வார்த்தையையே உபயோகப்படுத்தினர். மேலும் 23 தீர்மானங்களை இந்த பொதுக்குழு நிராகரிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகமும், ஜூலை 11ஆம் தேதி கூடும் பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை தீர்மானத்துடன் மற்ற தீர்மானங்களும் நிறைவேற்றப்படும் என்று கே.பி. முனுசாமியும் கூறினர்.
இதை எதிர்பார்க்காத ஓ.பி.எஸ்ஸும், அவரது ஆதரவாளர்களும் இது சட்டத்திற்கு புறம்பான பொதுக்குழு என்று கூறி கூட்டத்தில் இருந்து பாதியில் வெளியேறினர். இந்த நிலையில் உயர் நீதிமன்ற உத்தரவை மீறியதாக கூறி அ.தி.மு.க பொதுக்குழு, செயற்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி போன்றோருக்கு எதிராக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் நீதிமன்றம் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.
அவற்றில், கட்சி பொதுக்குழு கூட்டத்தில் உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்தது, நிரந்தர அவைத் தலைவராக தமிழ் மகன் உசேனை நிரந்தர அவைத் தலைவராக நியமித்து தீர்மானம் நிறைவேற்றியது, ஒற்றைத்தலைமை வேண்டும் என்று கையெழுத்திட்டு ஒப்படைத்தது, ஜூலை 11ல் அடுத்த பொதுக்குழு கூட்டம் கூடும் என்று அறிவித்தது ஆகியவை நீதிமன்ற அவமதிப்பு செயல் என்று கூறப்பட்டுள்ளது. இந்தமனு நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.