Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் பாதிக்கப்படுவார்கள் – அதிர்ச்சி கொடுத்த அதிகாரி..!!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி லட்சுமி பிரியா அதிர்ச்சியளிக்கக்கூடிய தகவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ராணிப்பேட்டை மாவட்டத்தில் 4,107 பேர் பாதிப்படைந்துள்ளனர். இவர்களில் நேற்று (நேற்றுமுன்தினம்) மட்டும் 200 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஜூலை மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பு மிக அதிகமாக இருக்கின்றது. அதனால் பரிசோதனைகளை மிகவும் அதிகப்படுத்தி இருக்கின்றோம். இந்த மாதத்தில் பரிசோதனைகள் இரண்டு மடங்காக செய்யப்பட்டிருக்கின்றது. ஆனாலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் கொரோனா பாதிப்பு அறியாமல் முக கவசம் அணியாமல் சமூக இடைவெளியை பின்பற்றாமல் மிக அலட்சியமாக வெளியே சுற்றுகிறார்கள். அதனால் மாவட்டம் முழுவதும் கொரோனா தொற்று அதிகமாகி உள்ளது. இவ்வாறு மக்கள் செயல்பட்டால் வருகின்ற ஆகஸ்ட் மாதத்திற்குள் 8000 பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு மாவட்ட நிர்வாகம் தயார் நிலையில் இருக்கின்றது. மாவட்ட நிர்வாகம் கொரோனா தடுப்பு பணிகளை நன்றாகவே செய்து வருகின்றது. இருந்தாலும் இதற்கு மக்கள் அனைவரும் முழுமையான ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.மிக சிறந்த முறையில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக ஆற்காட்டில் இருக்கின்ற தனியார் கல்லூரியில் 150 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன.

மேலும் வாலாஜா அரசினர் கலைக்கல்லூரியில் இயற்கை மற்றும் யோகா முறையில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றது. அங்கு 310 படுக்கைகள் தயார் படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோயாளிகளுக்கு தரமான முறையில் குறிப்பிட்ட நேரத்திற்கு உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றது என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி கூறியுள்ளார். அவர் கூறும்போது கலெக்டர் திவ்யதர்ஷினி மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் போன்றோர் உடன் இருந்தார்கள்.

இதற்கு முன்னதாக மாநில கண்காணிப்புக்குழு அதிகாரியும் கூடுதல் ஆணையருமான லட்சுமி பிரியா மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி போன்றோர் தலைமையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆலோசனை கூட்டம் நடந்தது. பின்னர் ராணிப்பேட்டை மருத்துவக் குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து விளாப்பாக்கம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு சுகாதார மருத்துவமனை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள், மகாலட்சுமி கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தும் விடுதிகள், சித்த மருத்துவ சிறப்பு மையம் அமைக்கப் பட்டுள்ள இடங்கள் அனைத்தையும் பார்வையிட்டனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்றைய நிலவரப்படி மொத்தம் 4491 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |