இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் உள்ள வாக்காளர் விவரங்களை உறுதி செய்யும் வகையிலும் ஒரு வாக்காளர் பெயர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதியில் இடம்பெறுவது அல்லது ஒரு வாக்காளர் பெயர் ஒரே தொகுதியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் இளம் பெறுவது ஆகியவற்றை கண்டறியவும் ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்த புதிய பணி வருகின்ற ஆகஸ்ட் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைத்து வாக்காளர்களும் ஆதார் எண் விவரங்களை தங்களது விருப்பத்தின் அடிப்படையில் தெரிவிக்க வேண்டும் . வாக்காளர்கள் www.nvsp.in., voters portal என்ற இணையதளம் மூலமாகவும், voter Helpline App என்ற செல்போன் செயலி மூலமாகவும் இணையவழியில் 6B படிவத்தை பூர்த்தி செய்து தாங்களே நேரடியாக ஆதார் எண்ணை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைத்துக்கொள்ளாம். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் இந்த பணிக்கு வரும்போது தன் விருப்பத்தின் அடிப்படையில் படிவம் 6B-ஐ பூர்த்தி செய்து சமர்ப்பித்து இணைத்துக்கொள்ள முடியும்.