மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா அதிகரித்து வருவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான அனைத்து அரசுப் பள்ளிகளையும் ஆகஸ்ட் 7ஆம் தேதி வரை மூட மணிப்பூர் ஆளுநர் லா கணேசன் உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் ஜூலை 25 முதல் மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டது. முன்பாக மாநில அரசானது, அரசு, அரசு உதவி பெறும், தனியார் மற்றும் சிபிஎஸ்இ-யுடன் இணைந்த பள்ளிகள் உட்பட அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறையை நீட்டித்து ஜூலை 24 வரை பள்ளிகளை மூடியது.
இதற்கிடையில் மாநிலத்தில் நிலவும் கொரோனா காரணமாக 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் விகிதத்தை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ததாக உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி 12 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இன்னும் தடுப்பூசி போடப்படாததால், அவர்கள் தொடர்ந்து கோவிட்-19 ஆல் பாதிக்கப்படுகின்றனர் என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது. பொதுநலன் கருதி இந்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 7ம் தேதி வரை பள்ளி மூடப்படும். இதனிடையில் ஜூலை 25 முதல் 8 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் மீண்டுமாக திறக்க அனுமதிக்கப்படும்.
இந்நிலையில் கோவிட்-19 பற்றிய சரியான நடவடிக்கை மற்றும் அரசின் நிலையான கட்டுப்பாடுகளையும், அரசாங்கத்தால் அவ்வப்போது வெளியிடப்படும் வழிகாட்டுதல்கள் கண்டிப்பாக கடைபிடிக்கப்படும் என உத்தரவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த வெள்ளிக்கிழமை நிலவரப்படி மணிப்பூரில் 79 நபர்களுக்கு புதியதாக கொரோனா வைரஸ் தொற்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கடந்த 24 மணிநேரத்தில் மாநிலத்தில் வைரஸ் குறித்த மரணம் எதுவும் பதிவாகவில்லை. மொத்த இறப்பு எண்ணிக்கையானது 2,124 ஆக இருக்கிறது.