Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடுகள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…. மக்கள் போராட்டத்தால் பரபரப்பு….!!!!

சென்னை தாம்பரம் அடுத்த மதுரப்பாக்கம் ஊராட்சியில் கலைஞர்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 137 வீடுகளில் 600க்கும் அதிகமான மக்கள் பல ஆண்டுக்களாக வசித்து வருகின்றனர். இப்பகுதி அரசுக்கு சொந்தமான நிலம் என்பதால் ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி‌ சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதன்படி வீடுகளை காலிசெய்யும்படி வருவாய்த்துறை சார்பாக நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. எனினும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் தாம்பரம் தாசில்தார் கவிதாவுக்கு ரூபாய்.25 ஆயிரம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம், வரும் 11-ஆம் தேதிக்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் உத்தரவு பிறப்பித்தது. இதனையடுத்து தாம்பரம் கோட்டாட்சியர் அறிவுடைநம்பி தலைமையில் தாசில்தார் கவிதா மற்றும் வருவாய்துறையினர் மதுரப்பாக்கம் பகுதியிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற‌ பொக்லைன் எந்திரங்களுடன் சென்றனர்.

இதற்கென பள்ளிக்கரணை துணை கமிஷனர் ஜோஸ் தங்கையா, உதவி கமிஷனர் ரியாசுதீன் தலைமையில் நூற்றுக்கும் அதிமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது வீடுகளை அகற்றுவதற்கு  எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் அவர்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்ட தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பொதுமக்களுக்கு மாற்று இடம் வழங்க வருவாய்த்துறைக்கு கோரிக்கை விடுத்தார். அதன்பின் பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி வீடுகளை அகற்ற‌ முயன்றபோது மதுரபாக்கம் ஊராட்சி தலைவர் வேல்முருகன், ஒன்றிய கவுன்சிலர் அமுதா வேல்முருகன், துணை தலைவர் புருஷோத்தமன் உட்பட பெரும்பாலானவர்கள் அவகாசம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இதன் காரணமாக காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன்பின் 4 பொக்லைன் எந்திரங்கள் வாயிலாக ஆக்கிரமிப்பு வீடுகளை போலீஸ் பாதுகாப்புடன் இடித்து அகற்றினர். இதுகுறித்து வருவாய்துறை அதிகாரிகள் கூறியதாவது “வீடுகள் அகற்றப்பட்ட இருளர் பகுதியை சேர்ந்த 27 பேருக்கு அகரம் பகுதியில் நிலம்வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அதேபோன்று மற்றவர்களுக்கு மாற்றுவீடுகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்று கூறினார்.

Categories

Tech |