புதுக்கோட்டையில் தனது கடையின் மேஜை அகற்றியதால் பூ வியாபாரி மயக்கம் அடைந்த சம்பவம் பரபரப்பையும் ஏற்படுத்தியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், நீர்நிலைகள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக் கொள்ள வேண்டும். அப்படி அகற்றவில்லையென்றால் நாங்களே அகற்றி விடுவோம். அதன்பின் சம்பந்தப்பட்டவரிடம் அதற்கான செலவு தொகை வசூலிக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று மாலை புதுக்கோட்டை நகரின் முக்கிய பஜாரான கீழ ராஜ வீதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி பொக்லைன் இயந்திரம் மூலம் விறுவிறுப்பாக நடைப்பெற்றது. மேலும் நகராட்சி ஊழியர்கள், பணியாளர்கள் ஈடுபட்டு வந்தனர். இந்தப் பணி நகராட்சி ஆணையர் நாகராஜன், அதிகாரிகள் மேற்பார்வையில் நடந்தது.
மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் குருநாதன், முகமது ஜாபர் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். கீழ ராஜ வீதியில் கடைகள் முன்பாக இருந்த சாலையோர கடைகள் ஆக்கிரமிப்புகள், பதாகைகள், கம்பங்கள், மழைநீர் வடிகாலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட அனைத்தும் அப்புறப்படுத்தப்பட்டது. அப்போது அதில் பூ வியாபாரம் செய்து கொண்டிருந்த ஒரு பெண்ணின் கடையின் மேஜை அகற்றபட்டது.
இதனை பார்த்து அந்த பெண் அழுது புலம்பி மேஜையை எடுத்து வேனில் ஏற்றி செல்வதை தடுத்து நிறுத்த முயற்சி கொண்டார். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதனால் அந்தப் பெண் மயங்கி கீழே விழுந்துள்ளார். அதன்பின் அந்த பெண்ணிற்கு காவல்துறையினர் தண்ணீர் கொடுத்து சமாதானப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.