கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணிகளை துரிதப்படுத்த மாநகராட்சி ஆணையர் பிரதாப் அமைத்த குழுவினர் 5 மண்டலங்களிலும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த நவம்பர் 9-ஆம் தேதி கிழக்கு மண்டலம் 55வது வார்டுக்கு உட்பட்ட எஸ்.ஐ.எஸ்.எஸ் காலனி சாலையை ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த வீடுகள், வணிக கட்டடங்கள் மற்றும் கட்சி அலுவலகங்கள் போன்றவற்றை காலி செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதனை காலி செய்வதற்கு ஒரு மாதம் கால அவகாசம் முடிவடைந்த நிலையில் நேற்று கிழக்கு மண்டலம் உதவி நகரமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் குழுவினர் பொக்லைன் எந்திரம் மூலமாக ஆக்கிரமிக்கப்பட்ட கட்டிடங்களை இடித்து அகற்றியுள்ளனர். கட்சி அலுவலகம் உட்பட 45 கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. இதில் குடிசை மாற்று வாரிய மூலம் மாற்று இடத்திற்காக காத்திருப்பதால் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட 12 வீடுகள் மட்டும் இடிக்கப்படவில்லை.