சிவகங்கை தேவகோட்டை அருகே 223 ஏக்கரில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட நிலம் மீட்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தேவகோட்டை தாலுகா கண்ணங்குடி அருகே கடம்பாகுடி, கே.சிறுவனூர் ஆகிய கிராமங்கள் உள்ளது. இந்த கிராமங்களை ஒட்டியுள்ள 223 ஏக்கர் வனக்காடுகள் வனத்துறைக்கு சொந்தமானது. இது ராமநாதபுரம் மாவட்டமாக இருந்த போது அந்த வனகாடுகள் அருகே ஓடுகின்ற ஆறுகளில் மணல் அரிப்பு ஏற்படாமல் தடுப்பதற்காக 1976-ஆம் ஆண்டு தென்னை வளர்ப்பு செய்து கொள்ள பலருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. தற்போது அந்த இடத்தில் எந்த தென்னை மரங்களும் இல்லை. அந்த வனக்காடுகளை பயன்படுத்தி இரண்டு கிராமங்களை சேர்ந்த விவசாயிகளும், விவசாய சாகுபடி செய்து காடுகளை ஆக்கிரமிப்பு செய்வதாகவும், அதன் காரணமாக நஞ்சை நிலங்களுக்கு பாசன வசதி இல்லாமல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து மதுரை ஐகோர்ட் கிளையில் அந்த கிராமத்தில் வசித்து வரும் சுப்பையா என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனு குறித்து விசாரித்த நீதிபதிகள் ராஜமாணிக்கம், சத்யநாராயணன் ஆகியோர் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள வனப்பகுதிகளை அப்புறப்படுத்தி 12 வார காலத்திற்குள் வனத்துறையினரிடம் ஒப்படைக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்ரமணியன், தேவகோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சபாபதி, போலீஸ் பாதுகாப்பு மற்றும் வருவாய் துறையினரின் முன்னிலையில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள நிலம் அப்புறப்படுத்தப்பட்டது.
அந்த ஆக்கிரமிப்பு பகுதியில் ஒரு வீட்டில் இரண்டு பெண்கள் மற்றும் மூன்று குழந்தைகள் இருந்தனர். அந்த வீட்டை அதிகாரிகள் இடிக்க முயன்ற போது அவர்களுக்கு வேறு இடம் தங்குவதற்கு இல்லை என்பது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு தாசில்தார் ராஜரத்தினம் தகவல் அளித்தார். அதே கிராமத்தில் நத்தத்தில் அவர்களுக்கு பட்டா வழங்கும் படியும், வீட்டை இடிக்காமல் கால அவகாசம் வழங்கும்படியும் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின் பேரில் அவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதன்பின் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட காடுகள் வனத்துறை கட்டுப்பாட்டிற்குள் சென்றது.