அந்தியூர் ஏரி நீர்வழி பாதையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 18 வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரியிலிருந்து நீர் வெளியேறி வரக்கூடிய பாதையில் உள்ள கண்ணப்பன் கேட்டு பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் அனைத்தையும் அகற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் ரவி, உதவி பொறியாளர் பரத், பச்சாபாளையம் கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம், அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ், மின்வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று மூன்று மாதங்களுக்கு முன்பே வீடுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் கொடுத்தார்கள்.
இந்நிலையில் நேற்று ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த வீடுகள் இடிக்கும் பணி தொடங்கியது. முதலில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு, மின் அளவீடு மீட்டர் எடுக்கப்பட்டது. இதனை அடுத்து வீட்டின் உரிமையாளர்களே வீட்டின் உள்ளே இருந்த பொருட்களை எடுத்து கொண்டனர்.
அதன்பின் பொக்லைன் எந்திரங்களை கொண்டு 15 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளது. இதைப்போன்று சந்தியபாளையம் ஏரியிலிருந்து உப நீர் வெளி வரக்கூடிய பிரம்மதேசம் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்த மூன்று வீடுகள் பொக்லைன் இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது. இந்த பணி போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது.