கடலூர் திருப்பாதிரிப்புலியூர் குப்பம் நெடுஞ்சாலை நகரில் உள்ள பாதை ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றக்கோரி சிலர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டுள்ளது. கடந்த 21 -ஆம் தேதி ஆக்கிரமிப்பு வீடுகளை மாநகராட்சி நிர்வாகிகள் இடிக்க சென்ற போது அந்தப் பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது நடைபெற்ற பேச்சு வார்த்தையில் வீடுகளை தாமாக இடிக்க கால அவகாசமும் வழங்கப்பட்டது.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகள் நகர அமைப்பு அலுவலர் முரளி, நகர அமைப்பு ஆய்வாளர் அருள்செல்வன் மற்றும் அலுவலர்கள் நேற்று ஆக்கிரமிப்பு வீடுகளை இடிப்பதற்காக சென்ற போது மீண்டும் எதிர்ப்பு தெரிவித்து அந்த பகுதி மக்கள் தர்ணா போராட்டம் நடத்தியுள்ளனர். அப்போது அதிகாரிகள் “ஏற்கனவே உங்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. அதனால் வீடுகளை நீங்களே இடித்துக் கொள்ளுங்கள் இல்லை என்றால் நாங்கள் இடிக்க வேண்டி இருக்கும்” என தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து ஆணையாளர் நரேந்திரன் சம்பவ இடத்திற்கு வந்து ஏற்கனவே போதுமான கால அவகாசம் அழித்துவிட்டோம். அதனால் ஆக்கிரமிப்பு வீடுகளை வருகிற 3-ம் தேதிக்குள் இடிக்க வேண்டும் இல்லை என்றால் 4-ம் தேதி நாங்கள் வந்து இடித்து விடுவோம் என கூறியுள்ளார். இதனை ஏற்றுக் கொண்ட அந்த பகுதி மக்கள் கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் ஏராளமான போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.