மயிலாப்பூர் கோவிந்தசாமி நகரில் அகற்றப்படும் குடியிருப்பு வாசிகள் மந்தைவெளி, மயிலாப்பூரில் தமிழ்நாடு அரசால் கட்டப்பட்டு வரும் நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் அடுக்குமாடி குடியிருப்பில் குடி அமர்த்தப்படுவார்கள் என்று சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியிலுள்ள இளங்கோ நகர், கோவிந்தசாமி நகர் ஆகிய பகுதிகளிலுள்ள சுமார் 300 வீடுகள் ஆக்கிரமிப்பில் இருப்பதாக கூறி, நேற்று அவற்றை அகற்றும் பணியில் பொதுப் பணித்துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் கண்ணையா என்பவர் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீக்குளித்தார். இதையடுத்து மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த அவர் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் பற்றி தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த நிலையில் பேசிய முதல்வர் ஸ்டாலின் நேற்று மயிலாப்பூரில் விரும்பத்தகாத ஒரு நிகழ்வு நடந்து விட்டதாகவும் கோவிந்தசாமி நகரில் ஆக்கிரமிப்புகளை அரசு அதிகாரிகள் அகற்றும்போது அதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்ணையா என்பவர் தீக்குளித்து உயிரிழந்த நிலையில் மிகுந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதாகவும் தெரிவித்தார்.
இனி வரக்கூடிய காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது அப்பகுதியிலுள்ள மக்களுடன் பேசி அவர்கள் விரும்பக்கூடிய இடத்தில் மறு குடியமர்வு செய்து அந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகே, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார். அதுமட்டுமல்லாமல் அத்தகைய மக்கள் குடியமர்த்தப்படக்கூடிய பகுதிகளில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்.
இதுகுறித்து மறு குடியமர்வு கொள்கை விரைவில் வெளியிடப்படும் என்று தெரிவித்தார். அத்துடன் இப்போது நடைபெற்றுள்ள சம்பவம் கடைசியாக இருக்க வேண்டும். மயிலாப்பூர், மந்தைவெளி பகுதிகளில் தமிழ்நாடு அரசின் சார்பாக கட்டப்பட்டு வரக்கூடிய நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அடுக்குமாடி குடியிருப்புகளில் அந்த பகுதியில் ஆக்கிரமிப்பிலிருந்து அகற்றப்படகூடிய மக்களுக்கு வீடுகள் வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.