காஞ்சீபுரம் மாவட்டம் ஆதனூர் ஊராட்சிக்கு உட்பட்ட லட்சுமிபுரம் பகுதியில் 25 வருடங்களுக்கு முன் அரசு நிலம் என நினைத்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 160-க்கும் மேற்பட்ட வீடுகளை கட்டி குடும்பத்துடன் குடியிருந்து வருகின்றனர். இந்நிலையில் பொதுமக்கள் வீடுகள் கட்டியுள்ள 12 ஏக்கர் 67 சென்ட் நிலப்பரப்பு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது என்பதால் லட்சுமிபுரம் பகுதியில் வீடுவீடாக சென்று நிலத்தை அளவிடும் பணியில் ஈடுபடுவதற்காக ஆதனூர் கிராம நிர்வாக அலுவலர் தலைமையில் 6 பேர் கொண்ட வருவாய்த்துறை குழுவினர் ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வந்தனர்.
இது தொடர்பாக தகவலறிந்த ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் வீடுகட்டி குடியிருக்கும் பொதுமக்கள் பெரும்பாலானோர் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு திரண்டுவந்து நிலத்தை அளவிடும் பணிக்காக வந்த வருவாய்த்துறை அலுவலர்களை முற்றுகையிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் இந்த இடம் சம்பந்தமாக நாங்கள் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளோம். இம்மனு மீதான அடுத்த வாய்தா வரும் வரை நாங்கள் குடியிருக்கும் லட்சுமிபுரம் இடத்தில் எவ்விதமான செயல்களிலும் ஈடுபடக் கூடாது எனவும் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் எனவும் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
எனவே நீங்கள் சுப்ரீம் கோர்ட்டை மீறி எதற்காக நாங்கள் குடியிருக்கும் பகுதியை அளவிடுவதற்காக வந்தீர்கள் என்று சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். அதனை தொடர்ந்து நிலத்தை அளவிடும் பணிக்காக வந்த 6 பேர் கொண்ட வருவாய்த் துறையினர் ஆதனூர் கிராமத்திலிருந்து புறப்பட்டு சென்றனர். இது தொடர்பாக ஆதனூர் ஊராட்சிமன்ற தலைவர் தமிழ் அமுதன் நிருபர்களிடம் கூறியிருப்பதாவது “ஆதனூர் லட்சுமிபுரம் பகுதியில் பல வருடங்களாக வீடுகட்டி குடியிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு உடனே அரசு பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்” என்று கூறினார்.