ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகளின் முன் தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
திருச்சி மாவட்டத்தில் துவரங்குறிச்சி பகுதியில் பூதநாயகி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு அருகில் அரசுக்கு சொந்தமான இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தில் ராமசாமி என்பவர் வீடு கட்டி தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இதனை அடுத்து ஆக்கிரமிப்பு இடத்தில் இருக்கும் ராமசாமியின் வீட்டை அகற்ற சென்னை ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவின் பேரில் பொன்னாம் பட்டி பேரூராட்சி நிர்வாகத்தினரும் வருவாய் துறை அதிகாரிகளும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நேற்று சென்றுள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ராமசாமி தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ குளிக்க முயன்றார். அந்த சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த போலீசார் அவரிடம் இருந்த மண்ணெண்ணெய் கேனை பிடுங்கி அவர் மீது தண்ணீரை ஊற்றி தீக்குளிப்பு முயற்சியை தடுத்து நிறுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் வருகின்ற திங்கட்கிழமைக்குள் ஆக்கிரமிப்பை அகற்றி கொள்ளுமாறு ராமசாமிக்கு அவகாசம் அளித்துள்ளனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.