காட்டு யானை காரை முட்டி தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட நவமலையில் மலைவாழ் மக்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கேரளாவில் இருந்து இடம்பெயர்ந்து வந்த காட்டு யானை பகல் மற்றும் இரவு நேரங்களில் வால்பாறை சாலை, சின்னார்பதி சாலை மற்றும் நவமலை சாலையில் சுற்றி திரிகிறது. இந்த காட்டு யானை நேற்று மாலை நவமலை சாலையில் வந்த அரசு பேருந்தை துரத்தி சென்றுள்ளது. இதனை பார்த்த ஓட்டுனர் வேகமாக பேருந்தை இயக்கி சென்றுள்ளார்.
இதனையடுத்து பேருந்துக்கு பின்னால் வந்த காரை காட்டு யானை ஆக்ரோஷத்தில் முட்டி தள்ளியதால் கார் உருண்டு சாலையோர பள்ளத்தில் விழுந்து கவிழ்ந்துவிட்டது. இதில் மின்வாரிய ஊழியரான சரவணன் என்பவர் காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சரவணனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் இரவு நேரங்களில் பொதுமக்கள் தனியாக வெளியே வரவேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.