சேலம் கலெக்டர் அலுவலகம் எதிரில் உள்ள ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தின் வளாகத்தில் 6 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் அவர்களது குடியிருப்புகள் கல்லறை தோட்டத்தில் ஆக்கிரமிப்பு கட்டப்பட்டுள்ளதாக கூறி சி.எஸ்.ஐ. ஆலயம் தரப்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த கோர்ட், ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற உத்தரவிட்டது. இதனையடுத்து ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றுவதற்கு வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதற்கு அங்கு குடியிருந்த 6 குடும்பத்தினர் தங்களுக்கு மாற்றி இடம் ஏற்பாடு செய்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை தொடர்ந்து உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி அவர்களது மனுக்களை ஆய்வு செய்து ஓமலூர் அருகில் உள்ள கோட்ட கவுண்டம்பட்டி குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 6 வீடுகளை ஒதுக்கீடு செய்தார்.
மேலும் வீடுகள் ஒதுக்கீட்டிற்கான ஆணையும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் ஆங்கிலேயர் கல்லறை தோட்டத்தில் உள்ள 6 ஆக்கிரமிப்பு வீடுகளையும் இடித்து அப்புறப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. சேலம் டவுன் தாசில்தார் செம்மலை, மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி, உதவி செயற்பொறியாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கர், கிராம நிர்வாக அலுவலர் கோபிநாத் ஆகியோர் டவுன் போலீசார் பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்புகளை அகற்றினர். மேலும் அதிகாரிகள் முன்னிலையில் கல்லறைத் தோட்டத்திற்கு யாரும் நுழையாத வகையில் வாசலுக்கு பூட்டு போடப்பட்டது.