கரூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் கரூர் ரவுண்டு டேபிள் இணைந்து ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சியை நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சி கரூர் மாநகராட்சி ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் அரசு பள்ளிகளில் 12-ஆம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எளிதாக ஆங்கில மொழியை கற்று கொடுக்கும் நோக்கத்தோடு இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தொடங்கி வைத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கூறியதாவது, ஆங்கில மொழியை மாணவர்கள் எளிதாக கற்று கொள்ளும் வகையில் ஆங்கில நண்பன் என்ற நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தினமும் 20 நிமிடங்கள் ஆங்கிலத்தில் கற்று கொள்ள கூடிய வகையில் மொத்தம் 60 வகுப்புகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதனையடுத்து அரசு பள்ளிகளில் வேலை பார்க்கும் ஆங்கில ஆசிரியர்கள் அனைவரையும் அழைத்து மாணவர்களுக்கு என்ன தேவை என்பது குறித்து கருத்துகள் கேட்கப்பட்டு அதன் அடிப்படையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதன் மூலம் உயர் கல்விகளில் சேரும் அரசு பள்ளி மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் சக மாணவர்களுடன் உரையாட முடியும் என கூறியுள்ளார்.