திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆசன நோய்க்கான சிகிச்சை செய்வதற்கு நவீன எந்திரம் வாங்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தற்பொழுது முதல் முறையாக ஆசனவாய் நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு நவீன லேசர் கருவி வாங்கப்பட்டிருக்கின்றது. இந்த கருவியானது ரூபாய் 16,50,000 ஆகும். இது நேற்று முன்தினம் முதல் பயன்பாட்டிற்கு வந்திருக்கிறது.
இது பற்றி மருத்துவமனை டீன் ரவிச்சந்திரன் கூறியுள்ளதாவது, ஆசனவாய் நோய்களான மூலம், பௌத்திரம், வெடிப்பு உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக இந்த நவீன லேசர் கருவி வாங்கப்பட்டிருக்கின்றது. இக்கருவி மூலம் சிகிச்சை பெறும் நோயாளிகள் அன்றைய தினமே வீட்டிற்கு செல்லலாம். அறுவை சிகிச்சைக்கு பிறகு குறைந்த அளவே உடல் வலி இருக்கும். மேலும், தழும்பு இருக்காது. இச்சிகிச்சையின் மூலம் இரத்த இழப்பும் ஏற்படாது. இந்த அறுவை சிகிச்சையை தனியார் மருத்துவமனைகளில் செய்தால் ரூபாய் 70 ஆயிரம் வரை செலவாகும். ஆனால் இங்கு முதலமைச்சர் காப்பீடு திட்டத்தின் மூலம் லேசர் அறுவை சிகிச்சையை இலவசமாக செய்து கொள்ளலாம். இந்த சிகிச்சையானது ஐந்து முதல் ஏழு நிமிடங்களுக்குள் முடிந்துவிடும் என அவர் கூறியுள்ளார்.